×

செரிமான பிரச்னை நீங்க எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் உண்ணும் உணவின் மூலம் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. அதேசமயம், உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால் ஆற்றல் கிடைக்காமல் போவதோடு, மேலும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால்தான் செரிமான மண்டலம் சரியாக வேலை செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன, அதனை கட்டுப்படுத்துவதற்கான எளிய வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.

நம் உடலில் பல நுண்ணுயிரிகள் உள்ளன. சில நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டியதை விட குறைவாக இருந்தால், சாப்பிட்ட உணவை ஜீரணிப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால்தான் நமது உடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் சரியான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு நாம் உண்ணும் உணவு காரணமாக இருக்கலாம். மேலும் தூக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களும் இருக்கலாம். அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடும்போது, நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. இதன் விளைவாக, செரிமான பிரச்னைகள் எழுகின்றன. அதுபோன்று, சிவப்பு இறைச்சி அதிகளவு சாப்பிட்டாலும் செரிமான பிரச்னை ஏற்படும்.

செரிமான பிரச்னையை சரி செய்யும் வழிகள்

உடலுக்கு தேவையான அளவு நார்ச்சத்து கிடைத்தால், நுண்ணுயிரிகளின் விஷயத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. அதனால்தான் ஆரோக்கியமான நார்ச்சத்து கொண்ட ப்ரோக்கோலி, கீரை மற்றும் அஸ்பாரகஸ் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.தினசரி தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதும் செரிமான பிரச்னைகளை தடுக்கும். இவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.உண்ணும் உணவில் முழு தானியங்கள் மற்றும் விதைகள் இருப்பதை உறுதி செய்து கொண்டால் அவை உடலுக்கு நல்லது. இதனால், செரிமான பிரச்னைகள் வராது.

வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்.

*புரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

*தினமும் தண்ணீர் நிறைய குடிப்பதும் செரிமானத்தை சீராக்க உதவும்.

*உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதும் செரிமான பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

*மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

*மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

*ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

*இவற்றை கடைபிடித்து வந்தால் செரிமான பிரச்னையை சரிசெய்யலாம்.

தொகுப்பு: தவநிதி

The post செரிமான பிரச்னை நீங்க எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...